மக்களவைத் தேர்தலில் தன்னுடன் கூட்டணிக்கு வருமாறு காங்கிரஸ் நச்சரித்து வரும் நிலையில் அதைத் தவி்ர்க்கவே விஜய்காந்த் விரும்புவதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த சட்டமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனியாக நின்று 8.33 சதவீத வாக்குகளை வாங்கிக் காட்டி திமுக, அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சி தந்தார் விஜய்காந்த்.மேலும் தன்னை வெகுவாக எதிர்த்த பாமகவை அதன் கோட்டையான விருத்தாசலத்திலேயே வென்று வன்னியர் கோட்டையில் பாமகவுக்கு பெரும் அரசியல் சறுக்கலை ஏற்படுத்திக் காட்டினார்.

மதுரை திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் ஒரு ஓட்டுக்கு இவ்வளவு என்று ஆயிரக்கணக்கில் பணத்தை வாரி இறைத்தபோது, அப்படிப்பட்ட செலவேதும் செய்யாமலேயே சுமார் 13,000 வாக்குகளை வாங்கிக் காட்டினார் விஜய்காந்த்.தேமுதிகவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது போய் காங்கிரசுடன் கூட்டணி வைத்து இத்தனை நாட்களாய் தான் விமர்சித்து வந்த திமுகவுடன் கைகோர்க்க வேண்டுமா என்ற கேள்வி விஜய்ரகாந்துக்கு எழுந்துள்ளது.

அரசியலில் உடனடி பதவி, அதிகாரம், லாபம் பார்க்க இவரது கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் ஆசையோடு அலைந்தாலும் விஜய்காந்த் மிக நிதானமாகவே உள்ளார்.இந்த மக்களவைத் தேர்தலிலும் தனித்து நின்று 10 முதல் 15 சதவீதம் வாக்குகளை வாங்கிக் காட்டினால், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை விட்டுவிட்டு காங்கிரஸ் தன்னுடன் நேரடியாக கூட்டணிக்கு வந்துவிடும் என்பது விஜய்காந்தின் கணக்கு என்கிறார்கள்.அப்படி காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் பெருவாரியான இடங்களில் வென்றுவிட முடியும் என்று விஜய்காந்த் தரப்பு கருதுவதாகத் தெரிகிறது.

இன்னும் இரண்டு வருடத்தில் இப்படி ஒரு வாய்ப்பு வரப் போகும் நிலையில் சில எம்பி தொகுகளுக்காக காங்கிரசுடன் கைகோர்த்து, திமுக கூட்டணிக்குள் நுழைந்து தேவையில்லாமல் நமது செல்வாக்கை நாமே சீர்குலைத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியை கூட்டணி ஆர்வத்துடன் தன்னை சந்தித்த கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் விஜய்காந்த் கேட்டதாகத் தெரிகிறது.விஜய்காந்தை எப்படியாவது காங்கிரஸ் இழுத்து வந்து தன்னையும் காப்பாற்றிவிடும் என்று திமுக காத்துக் கொண்டிருக்கும் நிலையில், தேமுதிகவுக்கு அதிமுகவும் தூது விட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், காங்கிரசுடனாவது கூட்டணி குறித்து ஆலோசிக்கத் தயாராக உள்ள விஜய்காந்த், அதிமுகவுடன் கூட்டு என்பதை பரிசீலிக்கக் கூட தயாராக இல்லை. இதை அதிமுக தரப்புக்கு தெளிவாகவே சொல்லிவிட்டது தேமுதிக.அதே போல திமுகவையும் அதிமுகவுக்கு இணையான அதே சம தூரத்தில் வைக்கவே விஜய்காந்த் விரும்புகிறார்.சட்டமன்றத் தேர்தலை குறி வைத்து தான் தேமுதிகவை ஆரம்பித்தார் விஜய்காந்த். சட்டமன்றத்தைப் பொறுத்தவரை தேமுதிகவுக்கு போட்டி என்பது அதிமுக, திமுகவுடன் தான்.

இதனால் இந்த இரு கட்சிகளுடன் கூட்டு வைப்பதைப் பற்றிய சிந்தனையே அவருக்கு இல்லை என்கிறார்கள். இப்போது காங்கிரஸ் மூலமாக திமுக கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டால் அது 2011 சட்டசபை தேர்தலில் தனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துள்ள விஜய்காந்த், இந்தத் தேர்தலில் கூட்டணியை விரும்பவில்லை.ஆனாலும் அடுத்து வரும் தேர்தல்களை சமாளிக்க பதவி அதிகாரம், பணம் இருந்தால் தான் நல்லது என்று கூறி அவரை கூட்டணிக்கு ஒப்புக் கொள்ள வைக்கும் முயற்சிகளி்ல் சில முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.