திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர் பதவி உள்பட 6 அமைச்சர்களும், மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு 3 கேபினட் அமைச்சர் பதவி உள்பட 6 அமைச்சர் பதவிகளையும் தர காங்கிரஸ் இறுதியாக பேசியுள்ளது. இதற்கு இரு கட்சிகளும் ஒப்புக் கொள்ளும் எனத் தெரிகிறது.

திமுகவுக்கான அமைச்சர் பதவிகளை ஒதுக்குவதி்ல் சிக்கல் ஏற்பட்டுள்ளதையடுத்து இன்று ஜனாதிபதியை சந்தித்து அமைச்சர்கள் பட்டியல் தரும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஒத்தி வைத்துவிட்டார்.தாங்கள் கேட்கும் அமைச்சர் பதவிகள், துறைகளைத் தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரப் போவதாகவும் காங்கிரசிடம் திமுக கூறிவிட்டது. இதையடுத்து சிக்கலைத் தீர்க்க தீவிர பேச்சு வார்ததை நடந்து வருகிறது.முன்னதாக இன்று காலை ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து நாளை தன்னுடன் பதவியேற்கும் அமைச்சர்களின் பட்டியலை தர இருந்தார் மன்மோகன் சிங்.

ஆனால், திமுகவுக்கு அமைச்சர் பதவிகள் ஒதுக்குவதில் பெரும் சி்க்கல் உருவாகியுள்ளதால் அமைச்சர்கள் பட்டியலை உருவாக்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.தங்களுக்கு எத்தனை கேபினட் அமைச்சர்கள் என்பதிலும் திமுக, மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் மூண்டுள்ளது.

கேட்டது 4+4 – கிடைப்பது 2+1+3:

திமுக 4 கேபினட் அமைச்சர் பதவிகளையும், இணையமைச்சர்களையும் கோரி வந்தது. இதுதொடர்பாக இழுபறி நீடித்தது. 2 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 4 இணையமைச்சர்களைத் தருவதாக காங்கிரஸ் கூறியது.இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன், ராசா ஆகியோர் பிரணாப் முகர்ஜி மற்றும் குலாம் நபி ஆசாத்தை சந்தித்துப் பேசினர்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர்கள், ஒரு தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி மற்றும் 3 துணை அமைச்சர் பதவிகளைத் தருவதாக காங்கிரஸ் தீர்மானமாக கூறியது.இதற்கு தயாநிதி மாறன், ராசா உடனடியாக பதிலளிக்கவில்லையாம். இருப்பினும் திமுக தரப்பு, இந்த புதிய ஏற்பாட்டை ஏற்றுக் கொள்ளலாம் எனத் தெரிகிறது.

அதேபோ, மம்தா பானர்ஜி, திமுகவுக்கு எத்தனை அமைச்சர் பதவிகள் தரப்படுகிறதோ அதே அளவுக்கு கேபினட்-இணையமைச்சர்களோடு கூடுதலாக ஒரு இணையமைச்சர் பதவி தர வேண்டும் என நிபந்தனை விதித்து வந்தார்.மேலும் ரயில்வே துறையையும் அவர் கேட்டு வந்தார். இதே துறையைத்தான் திமுகவும் கேட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் காங்கிரஸ் தரப்பு சற்று முன்பு மமதாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் இறுதியில், மமதா கட்சிக்கு 3 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 3 துணை அமைச்சர் பதவிகள் கொடுப்பதாக காங்கிரஸ் கூறியதாம்.

திமுகவை விட கூடுதலாக ஒரு அமைச்சர் பதவி என்ற வறட்டுப் பிடிவாதத்தில் இருந்து வந்த மமதா, இப்போது அந்த நிலையிலிருந்து இறங்கியுள்ளார். திமுகவை விட கூடுதலாக ஒரு கேபினட் அமைச்சர் பதவி தருவதாக காங்கிரஸ் கூறுவதால் இந்த இறக்கமாம்.கடந்தமுறையை விட 60 இடங்களில் அதிகமாக வென்றுள்ள காங்கிரஸ் தனக்கு இம்முறை கூடுதலாக அமைச்சர் பதவிகளை எடுத்துக் கொள்ளும் திட்டத்தில் உள்ளது.

பாலு-ராசாவுக்கு காங். எதிர்ப்பு?:

இதற்கிடையே, டி.ஆர்.பாலு, ராசாவுக்கு இம்முறை அமைச்சர் பதவியே தர மாட்டோம் என்று காங்கிரஸ் கூறுவதாகவும் அதை திமுக கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிகிறது.யாருக்கு அமைச்சர் பதவி என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம், இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலையிடவே கூடாது என்று திமுக கூறிவி்ட்டதாகத் தெரிகிறது.பாலுவுக்கு எப்படியாவது அமைச்சர் பதவி வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில், பாலுவுக்கு சபாநாயகர் பதவியைத் தர வேண்டும் என வற்புறுத்தி வருகிறதாம் திமுக.

திமுகவைப் பொறுத்தவரை பாலு, தயாநிதி, ராசா, அழகிரி ஆகியோருக்கு என 4 கேபினட் அமைச்சர் பதவிகள், கனிமொழிக்கு ஒரு தனிப் பொறுப்புடன கூடிய இணையமைச்சர் பதவி, 3 இணையமைச்சர் பதவிகளையும் கோரி வந்த நிலையில், தற்போது தற்போது 6 பதவிகளே கிடைக்கும் சூழ்நிலை உள்ளது.எனவே மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு கேபினட் அமைச்சர் பதவிகளும், கனிமொழிக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியும் கிடைக்கலாம். டி.ஆர்.பாலு, ராசா ஆகியோர் திராட்டில் விடப்படலாம் என தெரிகிறது.

திமுகவுக்கு ரயில்வே இல்லை..

அதேபோல திமுக அழுத்தமாக வலியுறுத்தி வந்த ரயில்வே துறையும் கிடைக்காத நிலை உள்ளது. அந்தத் துறையை மமதாவுக்குக் கொடுக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அத்துறையை மமதாவே வகிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.அதற்குப் பதில் திமுகவுக்கு சுகாதாரம் கொடுக்கப்படலாம். இந்தத் துறையை அழகிரி[^] க்கு திமுக கொடுக்கக் கூடும். அதேபோல தயாநிதி மாறனுக்கும் தகவல் தொழில்நுட்பத் துறை கிடைக்காது எனத் தெரிகிறது. அதற்குப் பதிலாக இரும்பு எஃகு துறை கிடைக்கக் கூடும்.திமுக முன்பு, ரயில்வே, தகவல் தொழில்நுட்பம், கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து, சுற்றுச்சூழல் ஆகியவையும், இணையமைச்சர் பதவிகளில் நலத்துறை, மின்துறை, உள்துறை, நிதி என பல துறைகளைக் கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.

வெளியிலிருந்து ஆதரவு மிரட்டல்…

முன்னதாக தனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், வெளியில் இருந்து ஆதரிக்கப் போவதாக திமுக கூறியதாகத் தெரிகிறது.கருணாநிதி மற்றும் மமதா பானர்ஜியின் இந்த பிடிவாதமான இழுபறியால்தான் மன்மோகன் சிங்கால் அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்தே ஜனாதிபதியை இன்று காலை சந்தித்து பட்டியலைத் தர இருந்த பிரதமர் அந்த சந்திப்பை ரத்து செய்துவிட்டார்.
பிரச்சனை தீர்ந்தால் இன்று மாலை அமைச்சர் பட்டியலை ஜனாதிதியிடம் பிரதமர் வழங்குவார்.

நன்றி தட்ஸ் தமிழ்

Advertisements

இதுவரை இலங்கையில் இப்படி ஒரு மோசமான, ரத்தக்களறியை நான் பார்த்ததில்லை என்று முல்லைத்தீவில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றி வரும் அரசு டாக்டர் வி.சண்முகராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு முழுவதும் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த பயங்கர பீரங்கித் தாக்குதலில் 2000க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்துள்ளது இலங்கை ராணுவம்.

ஆயிரக்கணக்கானோர் கை, கால்களை இழந்து ரத்த வெள்ளத்தில் படுகாயமுற்றுள்ளனர். அவர்களை சிகிச்சைக்குக் கொண்டு செல்லக் கூட வழியில்லாத அவல நிலை காணப்படுகிறது.அங்கு காணப்படும் நிலை குறித்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள ஒரே ஒரு தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றி வரும் அரசு டாக்டர் வி.சண்முகராஜா கூறுகையில், எனது வாழ்நாளில் இப்படி ஒரு ரத்தக்களறியை நான் பார்த்ததில்லை. உடல்கள் வந்து கொண்டே உள்ளன. அதேபோல காயமுற்றவர்களும் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளனர். பலி எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என அஞ்சுகிறேன்.

சில உடல்களை எடுத்து வர முடியாத அளவுக்கு சிதைந்து போய் விட்டதால் அவற்றை ஆங்காங்கே புதைத்துக் கொண்டிருக்கின்றனர்.பீரங்கிக் குண்டுகளில் பல மருத்துவமனைக்கு வெகு அருகிலும் வந்து விழுந்துள்ளன. இதனால் மருத்துவமனையில் இருந்த பலரும் பதுங்கு குழிகளுக்கு மாற்றப்பட்டனர்.

எங்களிடம் தற்போது ஓரளவு மருந்துகள் உள்ளன. ஆனால் போதிய டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் இல்லை. எனவே காயமுற்று வருகிறவர்களுக்கு முதலில் முதலுதவி சிகிச்சை மட்டுமே அளித்து வருகிறோம். எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எங்களது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை.உயிரிழந்தவர்களின் உடல்களைப் புதைக்கக் கூட ஆட்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. இதற்காக தொண்டர்களைத் தேடி வருகிறோம் என்றார்.

நன்றி.. தட்ஸ் தமிழ்

தமிழக மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும், தேர்தலில் தமிழகத்திலிருந்து அதிக எம்.பிக்களைப் பெற வேண்டும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸும் திமுகவும் தனிமைப்பட்டு விடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே மேனனையும், நாராயணனையும் கொழும்புக்கு அனுப்ப காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு செய்ததாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து இலங்கையை போரை நிறுத்தச் சொல்லுங்கள் என்ற கோரிக்கை வந்தால் போனில் பேசுவார்கள் அல்லது அறிக்கை விடுவார்கள். அத்துடன் நின்று கொள்ளும் இந்திய அரசு.
ஆனால் திடுதிப்பென நேற்று முடிவெடுத்து, இன்றே மேனனையும், நாராயணனையும் இலங்கைக்கு அனுப்பி படு சுறுசுறுப்பாக செயல்பட்டுள்ளது மத்திய அரசு. ஆனால் இதன் பின்னணியில் அரசியல் இருப்பது அரசியல் தெரியாதவர்களுக்கும் தெளிவாகப் புரியம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

உள்ளூரில் தேர்தல் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்ற கவலையால்தான் ஒன்றுக்கு இரண்டு தூதர்களை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது என்பது அவர்களின் கருத்து.
இதுகுறித்து பிரபல அரசியல் பத்திரிக்கையாளர் கரன் தாப்பர் கூறுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் திமுகவுக்கு தற்போது பெரும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக இரு கட்சிகளும் ஒதுக்கப்பட்டு விடும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. எனவேதான் ஓட்டுக்கள் போய் விடக் கூடாது என்ற காரணத்தால் தூதர்களை அனுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இலங்கையில் வெடிப்பது தமிழகத்தின் மூலமாக தங்களைப் பாதித்து விடக் கூடாது என்ற ஒரே நோக்கம்தான் இதன் பின்னணியில் இருப்பதாக நான் கருதுகிறேன் என்றார்.முன்னாள் இந்தியத் தூதரும், பாதுகாப்புத்துறை நிபுணருமான பத்ரகுமார் கூறுகையில், தற்போது, இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு அழுத்தமாக செயல்படவில்லை என்ற கருத்து தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இலங்கை ராணுவத்தின் அடக்குமுறை, இனப்படுகொலை நடவடிக்கைகளை இந்திய அரசு தடுத்து நிறுத்தத் தவறி விட்டதாக தமிழக மக்கள் பெரும்பான்மையாக கருதுகிறார்கள் என்றார்.

இந்தியா இப்போது அவசரம் அவசரமாக தூதர்களை அனுப்பியுள்ள போதிலும் கூட, ஒரு வேளை நாளையே போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் கூட கடந்த சில மாதங்களில் கொல்லப்பட்டு விட்ட ஆயிரக்கணக்கான உயிர்கள் திரும்ப வரப் போவதில்லை. எனவே இந்தியாவின் தற்போதைய நடவடிக்கையால் உண்மையான பலன் ஈழத் தமிழர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை என்றும் இந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இருப்பினும் கடைசி வரைக்கும் ஒன்றுமே செய்யாமல் விட்டு விட்டார்களே என்ற பேச்சு வந்து விடக் கூடாது என்ற பயத்தால்தான் தூதர்களை அனுப்பியுள்ளது மத்திய அரசு என்றும் இவர்கள் கருதுகிறார்கள்.அதேசமயம், இலங்கையில் விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்பதில் ஏன் இந்தியா இதுவரை காட்டியிராத அளவுக்கு இவ்வளவு வேகம் காட்டுகிறது என்பதை பெயர் சொல்ல விரும்பாத ஒரு மத்திய அரசு அதிகாரி ஒருவர் இப்படி விளக்குகிறார்..

தெற்காசியாவில் யார் பெரியண்ணா என்பதில் பெரிய போட்டியே நடக்கிறது. இந்தியா தனது ஆதிக்கத்தை யாரிடமும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இந்தியா உதவியிருக்காவிட்டால் அந்த இடத்தில் இப்போது சீனா இருந்திருக்கும். இன்னேரம் ஒட்டுமொத்த தமிழினமும் கூட அழிந்து போயிருக்கும்.அதனால்தான் இந்தியா தலையிட்டது. யாரையும் உள்ளே அனுமதித்து விடக் கூடாது என்ற ராஜதந்திரமும் இதில் அடங்கியிருக்கிறது என்கிறார்.ஆனால் பாதித் தமிழினத்தின் நாடி அடங்கிப் போய் விட்டதே என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.

நன்றி தட்ஸ் தமிழ்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக அணிக்கும், அதிமுக அணிக்கும் கடுமையான போட்டி நிலவும் என்று  லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த 2 கட்சிகளுக்கும்  அடுத்த படியாக தேமுதிகவிற்கு  மக்களின் ஆதரவு இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

சென்னை லயோலா கல்லூரியில் உள்ள மக்கள் ஆய்வகம் மற்றும் தமிழ் வழி முதுகலை ஊடக கலைகள் துறை மாணவர்கள் பேராசிரியர் ராஜநாயகம் வழிகாட்டுதலின் பேரில் இம்மாதம் 1-ந் தேதியிலிருந்து, 10-ந் தேதி வரை தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், மக்களை சந்தித்து கருத்துகளை சேகரித்துள்ளனர்.

ஆய்வு முடிவுகள் வெளியீடு
இந்த ஆய்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.  அகில இந்திய கத்தோலிக்க மாணவர் சங்கத்தின் ஆலோசகர் ஹென்றி ஜெரோம் இந்த ஆய்வினை இன்று வெளியிட்டார்.  பேராசிரியர் ராஜநாயகம், ஆய்வுத் துறை மாணவி சங்கமித்திரை  ஆகியோர் இந்த களஆய்வு குறித்த விவரங்களை பத்திரிகையாளர் களிடம் விளக்கிக் கூறினார்கள்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான அணி 34.9 சதவிகிதம் வாக்குகள் பெறும் என்றும், திமுக தலைமையிலான அணி 34.5 சதவிகிதம் வாக்குகள் பெறும் என்றும் இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேமுதிகவுக்கு 3-ம் இடம்

இதற்கு அடுத்தபடியாக 12.3 சதவிகித வாக்குகளை தேமுதிக பெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தனியாக 27.3 சதவிகித வாக்காளர்களின் ஆதரவையும், திமுக 26.5 சதவிகித  வாக்காளர்களின் ஆதரவையும் பெறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக அணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு 6.4 சதவிகிதம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சிகள் 1.2 சதவிகிதம், முஸ்லிம் லீக் கட்சிக்கு 0.4 சதவிகிதம் மக்களின் ஆதரவு உள்ளது. அதிமுக  அணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு 2.4 சதவிகிதம், பாமகவுக்கு 3 சதவிகிதம், சிபிஐ-1 சதவிகிதம், சிபிஎம் கட்சிக்கு 1.2 சதவிகிதம் ஆதரவு உள்ளது. பிஜேபிக்கு 3.1 சதவிகிதம் ஆதரவும் அந்த அணியில் சமக இடம் பெற்றால்  அவர்களுக்கு 0.4 சதவிகிதம் வாக்காளர்கள் ஆதரவு இருப்பதாக இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிறகட்சிகள் மற்றும் சுயேட்சை களுக்கு 1.7 சதவிகிதம் வாக்குகள் கிடைக்கும் என்றும், 13.1 சதவிகித வாக்காளர்கள் இன்னும் யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானிக்கவில்லை என்றும், அந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.  3 ஆண்டு திமுக ஆட்சி திருப்தி அளிப்பதாக 47.5 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். அதிருப்தி அளிப்பதாக 44.6 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான 5 ஆண்டுகால மத்திய ஆட்சி திருப்தி அளிப்பதாக 43.3 சதவிகிதத்தினரும்,  அதிருப்தி அளிப்பதாக 42.2 சதவிகிதத்தினரும் கூறியுள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சனை

தமிழகத்தை பொறுத்தவரை இலங்கை தமிழர் பிரச்சனைதான் இந்த தேர்தலில்  முதலிடம் பெறுவ தாகவும் (28.8 சதவிகிதம்) விலைவாசி உயர்வு (23.7 சதவிகிதம்), மற்ற பிரச்சனைகள் அடுத்தபட்சம்தான் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் விலைவாசி உயர்வுதான் (24.1 சதவிகிதம்) முன்னணியில் உள்ளது. தீவிரவாதம், பயங்கரவாதம் (24.4 சதவிகிதம்), இலங்கை தமிழர் பிரச்சனை(19.4 சதவிகிதம்), மேலும் மின்வெட்டு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவையும் முக்கிய பிரச்சனை களாக மக்கள் கருதுகிறார்கள்.

அதிமுக மீது நம்பிக்கை

தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் ஆய்வுக்கு எடுத்து கொண்ட 5 பிரச்சனைகளில்,  இலங்கை தமிழர் பிரச்சனை, விலைவாசி உயர்வு, சட்டம்- ஒழுங்கை பராமரித்தல், மின்வெட்டு ஆகிய பிரச்சனைகளை அதிமுக அணி வெற்றிபெற்றால்தான் தீர்க்க முடியும் என்றும், வேலை யில்லா திண்டாட்டத்தை மட்டுமே திமுக அணி தீர்க்க முடியும் என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அகில இந்திய அளவில் இலங்கை தமிழர் பிரச்சனை (31.4சதவிகிதம்), மின்சாரவெட்டு(24.6சதவிகிதம்), வேலையில்லா திண்டாட்டம் (28.9 சதவிகிதம்) இந்த பிரச்சனைகளை எந்த அணி வெற்றி பெற்றாலும் தீர்க்க முடியாது என்று அதிக அளவிலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சம பலத்தில் திமுக-அதிமுக

திமுக அணியும், அதிமுக அணியும் தற்போது சமவலுவுடன் களத்தில் நிற்பதாகவும், கட்சி ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் சமசெல்வாக்குடன் இருப்பதாலும், இதுவரையிலும் முடிவெடுக்காத நிலையில் உள்ள 13.1 சதவிகித வாக்காளர்களின் முடிவே இவர்களின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.திருமங்கலம் தேர்தலை போல, தாங்கள் நன்கு ‘கவனிக்க’ப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பெரும்பான்மையான வாக்காளர் களிடம் இருப்பதாகவும், அந்த எதிர்பார்ப்பும் இலங்கை பிரச்சனையை கையாளும் முறையும், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்று லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

இலங்கை விவகாரத்தில் திடீர் திருப்பமாக விடுதலைப் புலிகள் ஆதரவு அரசியல் கட்சியான தமிழர் தேசிய கூட்டமைப்பை (TNA) இந்தியா பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆனால், போர் நிறுத்தத்துக்கு இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போருக்கும் உதவிக் கொண்டிருப்பதாகக் கூறி இந்த அழைப்பை ஏற்க அந்தக் கட்சி மறுத்துவிட்டது.இந்தக் கட்சிக்கு இலங்கை நாடாளுமன்றத்தி்ல் 22 எம்பிக்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் இந்தக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பிக்கள் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் அமைச்சர்களையும் சந்தி்க்க காத்துக் கிடந்தும் கூட அவர்களை சந்திக்க யாரும் முன் வரவில்லை.

இந் நிலையில் தமிழகத்தில் இலங்கை விவகாரம் காங்கிரஸ்-திமுக கூட்டணியை மொத்தமாக பதம் பார்க்கப் போவது உறுதி என பல்வேறு கருத்துக் கணிப்புகளும் கூறுவதையடுத்து ‘டேமேஜ் கண்ட்ரோலில்’ குதித்துள்ளது மத்திய அரசு.இந்த வகையில் திடீரென வரும் 14, 15ம் தேதிகளி்ல் தன்னை சந்திக்க வருமாறு இந்திய வெளியுறுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் இந்தக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை பிரச்சனை பற்றிப் பேச பலமுறை இலங்கை சென்ற மேனன் ஒரு முறை இந்தக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பு நிராகரிப்பு:

இந் நிலையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது பேச்சுவார்த்தைக்கான நேரமல்ல என அந்தக் கூட்டமைப்பின் எம்பியான ஸ்ரீகாந்தா கூறியுள்ளார்.அவர் கூறுகையில், இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமல்ல, போருக்கும் துணை புரிந்து கொண்டு்ள்ளது. இந்தப் போரில் அப்பாவி மக்கள் கொலையாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவுடன் பேச நாங்கள் விரும்பவில்லை.

போரை நிறுத்த இந்தியா ஏதாவது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்திய அதிகாரிகளை சந்திப்போம் என்றார்.அதே போல இந்தக் கூட்டமைப்பின் திரிகோணமலை எம்பியான துரைரத்தினசிங்கம் கூறுகையில், இது மிகத் தாமதமாக வந்துள்ள அழைப்பு. இந்திய அதிகாரிகளையும் தலைவர்களையும் நாங்கள் சந்திக்க வரும்போது மேலும் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் செத்து மடிந்திருப்பார்கள். பாதுகாப்பு வளையத்திலேயே ராணுவம் நடத்தும் குண்டு வீச்சுக்கு குழந்தைகளும் பெண்களும் பலியாகிக் கிடப்பார்கள்.இதனால் முதலில் பாதுகாப்பு வளையத்தில் தாக்குதல் நடத்தக் கூடாது என்று இலங்கையை இந்தியா தடுத்து நிறுத்தினால் வேண்டுமானால் பேச்சுவார்த்தை குறித்து யோசிக்கலாம். தாற்காலிக போர் நிறுத்தத்துக்காவது இந்தியா வழி செய்ய வேண்டும் என்றார்.

நன்றி தட்ஸ் தமிழ்

மக்களவை தேர்தலில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது மதுரை தொகுதியில் மு.க.அழகிரியும்,பெரம்பலூரில் நடிகர் நெப்போலியனும், ராமநாதபுரத்தில் நடிகர் ரித்தீஷûம் போட்டியிடுகின்றனர்.  மதிமுகவிலிருந்து திமுகவில் சேர்ந்த எல்.கணேசன், செஞ்சி ராமச் சந்திரன், மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.

மக்களவை தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் திமுக,காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் திமுகவுக்கு 21 இடமும், காங்கிரசுக்கு 16 இடங்களும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்களும், முஸ்லிம் லீக்கிற்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டன.

அதன்படி திமுக போட்டியிடும் 21 இடங்களுக்கு கடந்த 3 நாட்களாக  கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவால யத்தில் நேர்காணல் நடைபெற்றது. முதலமைச்சரும், திமுக தலை வருமான கருணாநிதி தலைமையில் இந்த நேர்காணல் நடந்து முடிந்தது. நேர்காணலுக்கு பின் செய்தியாளர் களிடம் பேசிய கருணாநிதி, திமுக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார். அதன்படி இன்று 21 வேட்பாளர் களை கொண்ட திமுகவின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி மதுரை மக்களவை தொகுதியில் மு.க.அழகிரி போட்டி யிடுகிறார். நடிகர் நெப்போலியன் பெரம்பலூர் தொகுதியிலும், நடிகர் ரித்தீஷ் ராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், ஆ.ராசா நீலகிரி தொகுதியிலும், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தஞ்சை தொகுதியிலும் போட்டியிடு கின்றனர். இந்த வேட்பாளர் பட்டியலில் பல புதுமுகங்களும் இடம் பிடித்துள்ளனர்.


வேட்பாளர் பட்டியல் வருமாறு:-

1. வடசென்னை-டி.கே.எஸ். இளங்கோவன். 2. மத்திய சென்னை- தயாநிதி மாறன். 3. தென் சென்னை-ஆர்.எஸ்.பாரதி.   4. ஸ்ரீபெரும்புதூர்-டி.ஆர்.பாலு. 5.திருவள்ளூர்-காயத்ரி ஸ்ரீதரன். 6. அரக்கோணம்-ஜெகத் ரட்சகன்.   7. கிருஷ்ணகிரி-சுகவனம். 8. தர்மபுரி- தாமரைச் செல்வன். 9.நீலகிரி-ஆ.ராசா.  10. கள்ளக்குறிச்சி- ஆதிசங்கர்.   11. பொள்ளாச்சி-சண்முக சுந்தரம்.

12. பெரம்பலூர்-நடிகர் நெப் போலியன். 13. தஞ்சை-எஸ்.எஸ். பழனிமாணிக்கம் 14. திருவண்ணாமலை- வேணு கோபால். 15. நாமக்கல்-காந்தி செல்வன். 16.கரூர்-கே.சி. பழனிச்சாமி.

17.மதுரை- மு.க.அழகிரி. 18. நாகை- ஏ.கே.எஸ்.விஜயன், 19. ராமநாதபுரம் – நடிகர் ஜே.கே.ரித்தீஷ். 20. தூத்துக்குடி-எஸ்.ஆர்.ஜெயதுரை. 21. கன்னியாகுமரி ஹெலன் டேவிட்சன். இந்த பட்டியலை முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டார்.
மதிமுகவிலிருந்து திமுகவில் சேர்ந்த எல். எல்.கணேசன், செஞ்சி ராமச் சந்திரன், மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு சீட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்கள் யாருக்கும் திமுக பட்டியலில் இடம் ஒதுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4 மந்திரிகளுக்கு  சீட் இல்லை
திமுக வேட்பாளர் பட்டியலில் நான்கு மத்திய அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.  மேலும் சில எம்.பி.க்களுக்கும் சீட் அளிக்கப்படவில்லை. முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்ட திமுக வேட்பாளர் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பழனி மாணிக்கம் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ஆனால் சுப்புலட்சுமி ஜெகதீசன், ரகுபதி, வெங்கடபதி, ராதிகா செல்வி ஆகியோருக்கு இந்த முறை இடம் அளிக்கப்படவில்லை.
மேலும் செ.குப்புசாமி, கிருஷ்ண சாமி, பவானி ராஜேந்திரன் ஆகி யோருக்கும் சீட் கிடைக்கவில்லை.

மக்களவைத் தேர்தலையொட்டி இந்தியா டுடே-மார்க்-எசி நீல்சன் ஆகியவை இணைந்து நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கூட்டணிக்கு 190 முதல் 199 இடங்களும், பாஜக கூட்டணிக்கு 172 முதல் 181 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.மூன்றாவது அணிக்கு 169-178 இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு 21 இடங்களும், திமுக கூட்டணிக்கு 18 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது. திமுக, சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜன் சக்தி மற்றும் இடதுசாரிகள், பாமக ஆகியவை ஆதரித்தால் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடும் என்கிறது கருத்துக் கணிப்பு.

உத்தரப் பிரதேசத்தில்…:

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கடந்த தேர்தலில் 11 இடங்களில் வென்றது. இம்முறை அவர் 30 இடங்களைப் பிடிப்பார். சமாஜ்வாடிக் கட்சி 29 இடங்களில் வெல்லும். இது கடந்த தேர்தலைவிட 6 இடங்கள் குறைவு. பாஜகவுக்கு 14 இடங்கள் கிடைக்கும். இது கடந்த தேர்தலைவிட 4 இடங்கள் அதிகம். காங்கிரசுக்கு 2 இடங்கள் குறைவாகக் கிடைக்கும்.

பஞ்சாபில்..

பஞ்சாபில் பாஜக-சிரோமணி அகாலிதளம் கூட்டணி 10 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் மட்டும் வெல்லும்.

 ஹரியாணாவில்…

 ஹரியாணாவில் காங்கிரஸ் 8 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் மட்டுமே வெல்லும். தமிழகத்தில்…

தமிழகத்தி்ல் அதிமுக கூட்டணிக்கு 21 இடங்களும் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு 18 இடங்களும் கிடைக்கும். தேமுதிக பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைக்காது.

 டெல்லி…

டெல்லியில் காங்கிரஸ் 6 இடங்கள், பாஜக ஒரு இடத்தில் வெல்லும்.

ஆந்திரா..

ஆந்திராவில் காங்கிரஸ் 21 இடங்களிலும், தெலுங்கு தேசம்-டி.ஆர்.எஸ். கூட்டணி, சிரஞ்சீவி கட்சி ஆகியவை 18 இடங்களிலும் வெல்லும். இதன்மூலம் காங்கிரசுக்கு கடந்த தேர்தலைவிட 8 தொகுதிகள் குறையும். கடந்த முறை தெலுங்கு தேசத்துடன் இணைந்து 5 இடங்களில் வென்ற பாஜகவுக்கு இம்முறை ஒரு இடமும் கிடைக்காது.

கர்நாடகம்…

 கர்நாடகத்தில் ஆளும் பாஜக 18 இடங்களில் வெல்லும். காங்கிரசுக்கு 6 இடங்களும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 4 இடமும் கிடைக்கும். இதன்மூலம் காங்கிரஸ் 2 இடங்களை இழக்கிறது. பாஜக கடந்த தேர்தலில் வென்ற அதே இடங்களை வெல்கிறது.

 கேரளா..

கேரளத்தில் இடதுசாரிக் கூட்டணிக்கு 8 இடங்களே கிடைக்கும். கடந்த தேர்தலில் ஒரு இடத்திலும் வெல்லாத காங்கிரக்கு இம்முறை 12 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைக்காது.

மேற்கு வங்கம்..

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-மம்தா பானர்ஜி கூட்டணிக்கு 16 இடங்களிலும் இடதுசாரிகளுக்கு 26 இடங்களும் கிடைக்கும். இதன்மூலம் இடதுசாரிகளுக்கு 9 இடங்கள் இழப்பு ஏற்படும். காங்கிரசுக்கு 10 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும். கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் வென்ற பாஜகவுக்கு இம்முறை அதுவும் கிடைக்காது.

பிகார்..

 பிகாரில் பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணிக்கு 21 இடங்கள் கிடைக்கும். லாலு-பாஸ்வான் கூட்டணிக்கு 19 இடங்கள் கிடைக்கும். காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைக்காது.

 ஒரிஸ்ஸா..

 ஒரிஸ்ஸாவில் கடந்த முறை 2 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரசுக்கு இம்முறை 9 இடங்களும் ஆளும் பிஜூ ஜனதா தளத்துக்கு 10 இடங்களும் கிடைக்கும். கடந்த முறை 7 இடங்கள் வென்ற பாஜகவுக்கு இம்முறை 2 இடங்களே கிடைக்கும்.

மகாராஷ்டிரா..

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ்-சரத்பவார் கூட்டணி 26 இடங்களில் வெல்லும். பாஜக-சிவசேனா கூட்டணி 21 இடங்களில் வெல்லும். இதன்மூலம் இம்முறை பாஜக-சிவசேனா கூட்டணிக்கு 3 இடங்கள் குறையும்.

 குஜராத்…

 குஜராத்தில் பாஜக 17 இடங்களில் வெல்லும். இது கடந்த தேர்தலை விட 3 தொகுதிகள் அதிகமாகும். கடந்த முறை 12 இடங்களில் வென்ற காங்கிரஸ் இப்போது 9 இடங்களில் வெல்லும்.

ராஜஸ்தான்..

ராஜஸ்தானில் பாஜக 13 இடங்களில் மட்டுமே வெல்லும். கடந்த முறை இங்கு 21 இடங்களைக் கைப்பற்றியது பாஜக. அதே நேரத்தில் கடந்த தேர்தலில் 4 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் இம்முறை 12 இடங்களில் வெல்லும். இவ்வாறு கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி 234 இடங்களிலும் பாஜக கூட்டணி 184 இடங்களிலும் இடதுசாரிகள் உள்ளிட்ட மற்ற கட்சிகள் 125 இடங்களிலும் வென்றது நினைவுகூறத்தக்கது

நன்றி தட்ஸ் தமிழ்…