திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர் பதவி உள்பட 6 அமைச்சர்களும், மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு 3 கேபினட் அமைச்சர் பதவி உள்பட 6 அமைச்சர் பதவிகளையும் தர காங்கிரஸ் இறுதியாக பேசியுள்ளது. இதற்கு இரு கட்சிகளும் ஒப்புக் கொள்ளும் எனத் தெரிகிறது.

திமுகவுக்கான அமைச்சர் பதவிகளை ஒதுக்குவதி்ல் சிக்கல் ஏற்பட்டுள்ளதையடுத்து இன்று ஜனாதிபதியை சந்தித்து அமைச்சர்கள் பட்டியல் தரும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஒத்தி வைத்துவிட்டார்.தாங்கள் கேட்கும் அமைச்சர் பதவிகள், துறைகளைத் தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரப் போவதாகவும் காங்கிரசிடம் திமுக கூறிவிட்டது. இதையடுத்து சிக்கலைத் தீர்க்க தீவிர பேச்சு வார்ததை நடந்து வருகிறது.முன்னதாக இன்று காலை ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து நாளை தன்னுடன் பதவியேற்கும் அமைச்சர்களின் பட்டியலை தர இருந்தார் மன்மோகன் சிங்.

ஆனால், திமுகவுக்கு அமைச்சர் பதவிகள் ஒதுக்குவதில் பெரும் சி்க்கல் உருவாகியுள்ளதால் அமைச்சர்கள் பட்டியலை உருவாக்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.தங்களுக்கு எத்தனை கேபினட் அமைச்சர்கள் என்பதிலும் திமுக, மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் மூண்டுள்ளது.

கேட்டது 4+4 – கிடைப்பது 2+1+3:

திமுக 4 கேபினட் அமைச்சர் பதவிகளையும், இணையமைச்சர்களையும் கோரி வந்தது. இதுதொடர்பாக இழுபறி நீடித்தது. 2 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 4 இணையமைச்சர்களைத் தருவதாக காங்கிரஸ் கூறியது.இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன், ராசா ஆகியோர் பிரணாப் முகர்ஜி மற்றும் குலாம் நபி ஆசாத்தை சந்தித்துப் பேசினர்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர்கள், ஒரு தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி மற்றும் 3 துணை அமைச்சர் பதவிகளைத் தருவதாக காங்கிரஸ் தீர்மானமாக கூறியது.இதற்கு தயாநிதி மாறன், ராசா உடனடியாக பதிலளிக்கவில்லையாம். இருப்பினும் திமுக தரப்பு, இந்த புதிய ஏற்பாட்டை ஏற்றுக் கொள்ளலாம் எனத் தெரிகிறது.

அதேபோ, மம்தா பானர்ஜி, திமுகவுக்கு எத்தனை அமைச்சர் பதவிகள் தரப்படுகிறதோ அதே அளவுக்கு கேபினட்-இணையமைச்சர்களோடு கூடுதலாக ஒரு இணையமைச்சர் பதவி தர வேண்டும் என நிபந்தனை விதித்து வந்தார்.மேலும் ரயில்வே துறையையும் அவர் கேட்டு வந்தார். இதே துறையைத்தான் திமுகவும் கேட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் காங்கிரஸ் தரப்பு சற்று முன்பு மமதாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் இறுதியில், மமதா கட்சிக்கு 3 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 3 துணை அமைச்சர் பதவிகள் கொடுப்பதாக காங்கிரஸ் கூறியதாம்.

திமுகவை விட கூடுதலாக ஒரு அமைச்சர் பதவி என்ற வறட்டுப் பிடிவாதத்தில் இருந்து வந்த மமதா, இப்போது அந்த நிலையிலிருந்து இறங்கியுள்ளார். திமுகவை விட கூடுதலாக ஒரு கேபினட் அமைச்சர் பதவி தருவதாக காங்கிரஸ் கூறுவதால் இந்த இறக்கமாம்.கடந்தமுறையை விட 60 இடங்களில் அதிகமாக வென்றுள்ள காங்கிரஸ் தனக்கு இம்முறை கூடுதலாக அமைச்சர் பதவிகளை எடுத்துக் கொள்ளும் திட்டத்தில் உள்ளது.

பாலு-ராசாவுக்கு காங். எதிர்ப்பு?:

இதற்கிடையே, டி.ஆர்.பாலு, ராசாவுக்கு இம்முறை அமைச்சர் பதவியே தர மாட்டோம் என்று காங்கிரஸ் கூறுவதாகவும் அதை திமுக கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிகிறது.யாருக்கு அமைச்சர் பதவி என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம், இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலையிடவே கூடாது என்று திமுக கூறிவி்ட்டதாகத் தெரிகிறது.பாலுவுக்கு எப்படியாவது அமைச்சர் பதவி வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில், பாலுவுக்கு சபாநாயகர் பதவியைத் தர வேண்டும் என வற்புறுத்தி வருகிறதாம் திமுக.

திமுகவைப் பொறுத்தவரை பாலு, தயாநிதி, ராசா, அழகிரி ஆகியோருக்கு என 4 கேபினட் அமைச்சர் பதவிகள், கனிமொழிக்கு ஒரு தனிப் பொறுப்புடன கூடிய இணையமைச்சர் பதவி, 3 இணையமைச்சர் பதவிகளையும் கோரி வந்த நிலையில், தற்போது தற்போது 6 பதவிகளே கிடைக்கும் சூழ்நிலை உள்ளது.எனவே மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு கேபினட் அமைச்சர் பதவிகளும், கனிமொழிக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியும் கிடைக்கலாம். டி.ஆர்.பாலு, ராசா ஆகியோர் திராட்டில் விடப்படலாம் என தெரிகிறது.

திமுகவுக்கு ரயில்வே இல்லை..

அதேபோல திமுக அழுத்தமாக வலியுறுத்தி வந்த ரயில்வே துறையும் கிடைக்காத நிலை உள்ளது. அந்தத் துறையை மமதாவுக்குக் கொடுக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அத்துறையை மமதாவே வகிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.அதற்குப் பதில் திமுகவுக்கு சுகாதாரம் கொடுக்கப்படலாம். இந்தத் துறையை அழகிரி[^] க்கு திமுக கொடுக்கக் கூடும். அதேபோல தயாநிதி மாறனுக்கும் தகவல் தொழில்நுட்பத் துறை கிடைக்காது எனத் தெரிகிறது. அதற்குப் பதிலாக இரும்பு எஃகு துறை கிடைக்கக் கூடும்.திமுக முன்பு, ரயில்வே, தகவல் தொழில்நுட்பம், கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து, சுற்றுச்சூழல் ஆகியவையும், இணையமைச்சர் பதவிகளில் நலத்துறை, மின்துறை, உள்துறை, நிதி என பல துறைகளைக் கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.

வெளியிலிருந்து ஆதரவு மிரட்டல்…

முன்னதாக தனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், வெளியில் இருந்து ஆதரிக்கப் போவதாக திமுக கூறியதாகத் தெரிகிறது.கருணாநிதி மற்றும் மமதா பானர்ஜியின் இந்த பிடிவாதமான இழுபறியால்தான் மன்மோகன் சிங்கால் அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்தே ஜனாதிபதியை இன்று காலை சந்தித்து பட்டியலைத் தர இருந்த பிரதமர் அந்த சந்திப்பை ரத்து செய்துவிட்டார்.
பிரச்சனை தீர்ந்தால் இன்று மாலை அமைச்சர் பட்டியலை ஜனாதிதியிடம் பிரதமர் வழங்குவார்.

நன்றி தட்ஸ் தமிழ்

Advertisements