இதுவரை இலங்கையில் இப்படி ஒரு மோசமான, ரத்தக்களறியை நான் பார்த்ததில்லை என்று முல்லைத்தீவில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றி வரும் அரசு டாக்டர் வி.சண்முகராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு முழுவதும் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த பயங்கர பீரங்கித் தாக்குதலில் 2000க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்துள்ளது இலங்கை ராணுவம்.

ஆயிரக்கணக்கானோர் கை, கால்களை இழந்து ரத்த வெள்ளத்தில் படுகாயமுற்றுள்ளனர். அவர்களை சிகிச்சைக்குக் கொண்டு செல்லக் கூட வழியில்லாத அவல நிலை காணப்படுகிறது.அங்கு காணப்படும் நிலை குறித்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள ஒரே ஒரு தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றி வரும் அரசு டாக்டர் வி.சண்முகராஜா கூறுகையில், எனது வாழ்நாளில் இப்படி ஒரு ரத்தக்களறியை நான் பார்த்ததில்லை. உடல்கள் வந்து கொண்டே உள்ளன. அதேபோல காயமுற்றவர்களும் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளனர். பலி எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என அஞ்சுகிறேன்.

சில உடல்களை எடுத்து வர முடியாத அளவுக்கு சிதைந்து போய் விட்டதால் அவற்றை ஆங்காங்கே புதைத்துக் கொண்டிருக்கின்றனர்.பீரங்கிக் குண்டுகளில் பல மருத்துவமனைக்கு வெகு அருகிலும் வந்து விழுந்துள்ளன. இதனால் மருத்துவமனையில் இருந்த பலரும் பதுங்கு குழிகளுக்கு மாற்றப்பட்டனர்.

எங்களிடம் தற்போது ஓரளவு மருந்துகள் உள்ளன. ஆனால் போதிய டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் இல்லை. எனவே காயமுற்று வருகிறவர்களுக்கு முதலில் முதலுதவி சிகிச்சை மட்டுமே அளித்து வருகிறோம். எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எங்களது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை.உயிரிழந்தவர்களின் உடல்களைப் புதைக்கக் கூட ஆட்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. இதற்காக தொண்டர்களைத் தேடி வருகிறோம் என்றார்.

நன்றி.. தட்ஸ் தமிழ்

Advertisements