நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக அணிக்கும், அதிமுக அணிக்கும் கடுமையான போட்டி நிலவும் என்று  லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த 2 கட்சிகளுக்கும்  அடுத்த படியாக தேமுதிகவிற்கு  மக்களின் ஆதரவு இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

சென்னை லயோலா கல்லூரியில் உள்ள மக்கள் ஆய்வகம் மற்றும் தமிழ் வழி முதுகலை ஊடக கலைகள் துறை மாணவர்கள் பேராசிரியர் ராஜநாயகம் வழிகாட்டுதலின் பேரில் இம்மாதம் 1-ந் தேதியிலிருந்து, 10-ந் தேதி வரை தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், மக்களை சந்தித்து கருத்துகளை சேகரித்துள்ளனர்.

ஆய்வு முடிவுகள் வெளியீடு
இந்த ஆய்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.  அகில இந்திய கத்தோலிக்க மாணவர் சங்கத்தின் ஆலோசகர் ஹென்றி ஜெரோம் இந்த ஆய்வினை இன்று வெளியிட்டார்.  பேராசிரியர் ராஜநாயகம், ஆய்வுத் துறை மாணவி சங்கமித்திரை  ஆகியோர் இந்த களஆய்வு குறித்த விவரங்களை பத்திரிகையாளர் களிடம் விளக்கிக் கூறினார்கள்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான அணி 34.9 சதவிகிதம் வாக்குகள் பெறும் என்றும், திமுக தலைமையிலான அணி 34.5 சதவிகிதம் வாக்குகள் பெறும் என்றும் இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேமுதிகவுக்கு 3-ம் இடம்

இதற்கு அடுத்தபடியாக 12.3 சதவிகித வாக்குகளை தேமுதிக பெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தனியாக 27.3 சதவிகித வாக்காளர்களின் ஆதரவையும், திமுக 26.5 சதவிகித  வாக்காளர்களின் ஆதரவையும் பெறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக அணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு 6.4 சதவிகிதம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சிகள் 1.2 சதவிகிதம், முஸ்லிம் லீக் கட்சிக்கு 0.4 சதவிகிதம் மக்களின் ஆதரவு உள்ளது. அதிமுக  அணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு 2.4 சதவிகிதம், பாமகவுக்கு 3 சதவிகிதம், சிபிஐ-1 சதவிகிதம், சிபிஎம் கட்சிக்கு 1.2 சதவிகிதம் ஆதரவு உள்ளது. பிஜேபிக்கு 3.1 சதவிகிதம் ஆதரவும் அந்த அணியில் சமக இடம் பெற்றால்  அவர்களுக்கு 0.4 சதவிகிதம் வாக்காளர்கள் ஆதரவு இருப்பதாக இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிறகட்சிகள் மற்றும் சுயேட்சை களுக்கு 1.7 சதவிகிதம் வாக்குகள் கிடைக்கும் என்றும், 13.1 சதவிகித வாக்காளர்கள் இன்னும் யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானிக்கவில்லை என்றும், அந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.  3 ஆண்டு திமுக ஆட்சி திருப்தி அளிப்பதாக 47.5 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். அதிருப்தி அளிப்பதாக 44.6 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான 5 ஆண்டுகால மத்திய ஆட்சி திருப்தி அளிப்பதாக 43.3 சதவிகிதத்தினரும்,  அதிருப்தி அளிப்பதாக 42.2 சதவிகிதத்தினரும் கூறியுள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சனை

தமிழகத்தை பொறுத்தவரை இலங்கை தமிழர் பிரச்சனைதான் இந்த தேர்தலில்  முதலிடம் பெறுவ தாகவும் (28.8 சதவிகிதம்) விலைவாசி உயர்வு (23.7 சதவிகிதம்), மற்ற பிரச்சனைகள் அடுத்தபட்சம்தான் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் விலைவாசி உயர்வுதான் (24.1 சதவிகிதம்) முன்னணியில் உள்ளது. தீவிரவாதம், பயங்கரவாதம் (24.4 சதவிகிதம்), இலங்கை தமிழர் பிரச்சனை(19.4 சதவிகிதம்), மேலும் மின்வெட்டு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவையும் முக்கிய பிரச்சனை களாக மக்கள் கருதுகிறார்கள்.

அதிமுக மீது நம்பிக்கை

தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் ஆய்வுக்கு எடுத்து கொண்ட 5 பிரச்சனைகளில்,  இலங்கை தமிழர் பிரச்சனை, விலைவாசி உயர்வு, சட்டம்- ஒழுங்கை பராமரித்தல், மின்வெட்டு ஆகிய பிரச்சனைகளை அதிமுக அணி வெற்றிபெற்றால்தான் தீர்க்க முடியும் என்றும், வேலை யில்லா திண்டாட்டத்தை மட்டுமே திமுக அணி தீர்க்க முடியும் என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அகில இந்திய அளவில் இலங்கை தமிழர் பிரச்சனை (31.4சதவிகிதம்), மின்சாரவெட்டு(24.6சதவிகிதம்), வேலையில்லா திண்டாட்டம் (28.9 சதவிகிதம்) இந்த பிரச்சனைகளை எந்த அணி வெற்றி பெற்றாலும் தீர்க்க முடியாது என்று அதிக அளவிலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சம பலத்தில் திமுக-அதிமுக

திமுக அணியும், அதிமுக அணியும் தற்போது சமவலுவுடன் களத்தில் நிற்பதாகவும், கட்சி ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் சமசெல்வாக்குடன் இருப்பதாலும், இதுவரையிலும் முடிவெடுக்காத நிலையில் உள்ள 13.1 சதவிகித வாக்காளர்களின் முடிவே இவர்களின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.திருமங்கலம் தேர்தலை போல, தாங்கள் நன்கு ‘கவனிக்க’ப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பெரும்பான்மையான வாக்காளர் களிடம் இருப்பதாகவும், அந்த எதிர்பார்ப்பும் இலங்கை பிரச்சனையை கையாளும் முறையும், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்று லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

Advertisements