இலங்கை விவகாரத்தில் திடீர் திருப்பமாக விடுதலைப் புலிகள் ஆதரவு அரசியல் கட்சியான தமிழர் தேசிய கூட்டமைப்பை (TNA) இந்தியா பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆனால், போர் நிறுத்தத்துக்கு இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போருக்கும் உதவிக் கொண்டிருப்பதாகக் கூறி இந்த அழைப்பை ஏற்க அந்தக் கட்சி மறுத்துவிட்டது.இந்தக் கட்சிக்கு இலங்கை நாடாளுமன்றத்தி்ல் 22 எம்பிக்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் இந்தக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பிக்கள் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் அமைச்சர்களையும் சந்தி்க்க காத்துக் கிடந்தும் கூட அவர்களை சந்திக்க யாரும் முன் வரவில்லை.

இந் நிலையில் தமிழகத்தில் இலங்கை விவகாரம் காங்கிரஸ்-திமுக கூட்டணியை மொத்தமாக பதம் பார்க்கப் போவது உறுதி என பல்வேறு கருத்துக் கணிப்புகளும் கூறுவதையடுத்து ‘டேமேஜ் கண்ட்ரோலில்’ குதித்துள்ளது மத்திய அரசு.இந்த வகையில் திடீரென வரும் 14, 15ம் தேதிகளி்ல் தன்னை சந்திக்க வருமாறு இந்திய வெளியுறுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் இந்தக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை பிரச்சனை பற்றிப் பேச பலமுறை இலங்கை சென்ற மேனன் ஒரு முறை இந்தக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பு நிராகரிப்பு:

இந் நிலையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது பேச்சுவார்த்தைக்கான நேரமல்ல என அந்தக் கூட்டமைப்பின் எம்பியான ஸ்ரீகாந்தா கூறியுள்ளார்.அவர் கூறுகையில், இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமல்ல, போருக்கும் துணை புரிந்து கொண்டு்ள்ளது. இந்தப் போரில் அப்பாவி மக்கள் கொலையாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவுடன் பேச நாங்கள் விரும்பவில்லை.

போரை நிறுத்த இந்தியா ஏதாவது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்திய அதிகாரிகளை சந்திப்போம் என்றார்.அதே போல இந்தக் கூட்டமைப்பின் திரிகோணமலை எம்பியான துரைரத்தினசிங்கம் கூறுகையில், இது மிகத் தாமதமாக வந்துள்ள அழைப்பு. இந்திய அதிகாரிகளையும் தலைவர்களையும் நாங்கள் சந்திக்க வரும்போது மேலும் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் செத்து மடிந்திருப்பார்கள். பாதுகாப்பு வளையத்திலேயே ராணுவம் நடத்தும் குண்டு வீச்சுக்கு குழந்தைகளும் பெண்களும் பலியாகிக் கிடப்பார்கள்.இதனால் முதலில் பாதுகாப்பு வளையத்தில் தாக்குதல் நடத்தக் கூடாது என்று இலங்கையை இந்தியா தடுத்து நிறுத்தினால் வேண்டுமானால் பேச்சுவார்த்தை குறித்து யோசிக்கலாம். தாற்காலிக போர் நிறுத்தத்துக்காவது இந்தியா வழி செய்ய வேண்டும் என்றார்.

நன்றி தட்ஸ் தமிழ்

Advertisements