அதிருப்தியில் கதர் சட்டைகள்

சூரியக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நடந்து முடிந்து விட்டாலும் சலசலப்பு இன்னமும் ஓயவில்லை.காலம் காலமாக தங்கள் வசமிருந்த ஸ்ரீபெரும்புதூர், கன்னியாகுமரி (முன்பு நாகர்கோயில்) மக்களவைத் தொகுதிகள் தற்போது சூரியக் கட்சி எடுத்துக் கொண்டிருப்பது, கதர் சட்டைகள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளதாம். இதனால், சம்மந்தப்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் கதர் சட்டைப் பிரமுகர்கள் சோர்ந்து போயுள்ளனராம். தொகுதி ‘கை’விட்டு போனதன் பின்னணியில், தென் மாநில விவகாரங்களை கவனிக்கும் அஞ்சா நெஞ்சர் இருக்கலாம் என்பது அவர்களது சந்தேகமாம். அஞ்சா நெஞ்சரின் மகள் கன்னியாகுமரியில் நிறுத்தப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களிலும் பேசப்படுகிறது.

***

நொந்துபோயிருக்கும் புயல்

இலைக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தைகள் ஜரூராக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மீது புயல் தலைவர் அதிருப்தியில் இருக்கிறாராம். நேற்று வந்த மாம்பழக் கட்சித் தலைவருக்கு ராஜ மரியாதை அளித்து, கேட்ட தொகுதிகளை வாரி வழங்கியுள்ள தலைவி, தனது விஷயத்தில் இன்னமும் சம்மதம் தெரிவிக்காமல் இருந்து வருவது கவலையை ஏற்படுத்தியிருக்கிறதாம். கட்சியில் இருந்து முக்கியத் தலைவர்கள் எதிர் முகாமிற்குத் தாவி வருவதால் இம்முறை இடங்கள் கேட்டுப் பெறுவதற்கு படாத பாடு பட வேண்டியிருக்கிறதாம். தோட்டத்தில் நேற்றிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடிக்க, 5 தொகுதிகள் என்ற முடிவு இன்று மாலை வெளியாகும் என்கிறார்கள்.

***

அடுத்த பிரமுகருக்கு குறி

இதுவும் புயல் கட்சியைப் பற்றிய தகவல்தான். ஏற்கனவே தொகுதிப் பங்கீடு விஷயத்தில் கவலையில் ஆழ்ந்திருக்கும் கலிங்கப்பட்டியாருக்கு, மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பம்பரக் கட்சியின் தென் மாவட்ட எம்.எல்.ஏ. ஒருவரை தங்கள் பக்கம் இழுக்க அறிவாலய வட்டாரம் தீவிரம் காட்டி வருகிறதாம். இதற்காக, சம்மந்தப்பட்ட நபரை அஞ்சாநெஞ்சரே தொடர்பு கொண்டு பேசி வருகிறாராம். விரைவில், அடுத்த இணைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

***

இடம் மாறும் சிறுத்தை?

சிதம்பரத்தில்தான் போட்டி என்ற உறுதிப்பாட்டில் இருந்த சிறுத்தைத் தலைவர், தற்போது விழுப்புரத்தில் களமிறங்கலாமா என்று யோசித்து வருகிறாராம். இதுவரை உறவாடி வந்த மாம்பழக் கட்சியை எதிர்த்து சிதம்பரத்தில் நிற்பது சங்கடமாக இருக்கும் என்பதால், இந்த யோசனையைப் பரிசீலித்து வருவதாக சிறுத்தைக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நன்றி வெப்துனியா

Advertisements