டாக்டர் ராமதாஸை ‘டாக்டர் அண்ணன்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறிப்பிட்டார். அதே போல ஜெயலலிதாவை பாமக நிறுவனரும் மீண்டும் ‘அன்புச் சகோதரி’ என்றார்.
போயஸ் தோட்டத்தி்ல் தன்னை ராமதாஸ் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:

மக்களைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்று அதிமுக-பாமக இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.பாமக நிறுவனர் அண்ணன் டாக்டருக்கும் எனக்கு நடந்த பேச்சுவார்த்தையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளை ஒதுக்குவது என்றும் 2010ம் ஆண்டில் ஒரு ராஜ்யசபா இடத்தை அவர்களுக்கு ஒதுக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.இன்று ஒரு மகிழ்ச்சியான நாளாகும். 8 வருடங்களுக்குப் பிறகு அண்ணன் என்னை சந்தித்து கூட்டணி உடன்பாட்டை செய்து கொண்டுள்ளார்.

நாடெங்கும் இது ஒரு வெற்றிக் கூட்டணி, வெல்ல முடியாத கூட்டணி என்பதை உணர்ந்துள்ளார்கள் என்றார்.மற்ற கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்து கேட்டபோது, மற்ற தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒரு சில தினங்களில் உடன்படிக்கை ஏற்பட்டு விடும் என்றார்.

(மீண்டும்) ‘அன்புச் சகோதரி’:

பின்னர் ராமதாஸ் கூறுகையில், அதிமுக பொதுச் செயலாளர் அன்புச் சகோதரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இது வெற்றிக் கூட்டணியாகும். புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி வெல்லும்.

அது சாதாரண வெற்றியாக இருக்காது. மாபெரும் வெற்றியாக இருக்கும் என்றார்.

Advertisements