திமுகவும், அதிமுகவும் தங்களது கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலையில் உள்ளன. காரணம் தேமுதிகவும், பாமகவும் தங்களது நிலையை முடிவு செய்யாததே.இரு கட்சிகளையும் இழுக்க திமுக, அதிமுக ஆகியவை பல வழிகளில் படு தீவிரமாக உள்ளன. ஆனால் கழுவிய நீரில் நழுவிய மீன் போல இரு கட்சிகளும் தங்களது பேரத்தில் பிடிவாதமாக இருப்பதால் இரு கட்சிகளையும் சேர்த்துக் கொள்வதில் திமுக, அதிமுக தரப்பில் குழப்பம் நிலவுகிறது.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சியின் நிலையை இன்று காஞ்சிபுரத்தில் அறிவித்தார். இன்று பிற்பகல் அவர் காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். பெருமளவில் திரண்டிருந்த தேமுதிக தொண்டர்களுக்கு மத்தியில் விஜயகாந்த் பேசினார்.

பலத்த வரவேற்புக்கு மத்தியில் விஜயகாந்த் பேச்சை தொண்டர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். தொண்டர்கள் கடலுக்கு மத்தியில் விஜயகாந்த் பேசுகையில்,

பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காஞ்சிபுரத்தில் தொடங்கினார். தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், நான் வருகிற 26ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறேன்.தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்யப் போகிறேன். நான் மக்களுடன் மட்டும்தான் கூட்டணி வைத்துள்ளேன். யாருடனும் கூட்டணி சேர மாட்டேன்.

நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு நீங்கள் வாக்களியுங்கள். ஆட்சிக்கு வந்தால் படிக்காத இளைஞர்களுக்கும் வேலை கொடுக்க ஏற்பாடு செய்வேன் என்றார் விஜயகாந்த்.தனித்துப் போட்டி என்ற முடிவை விஜயகாந்த் அறிவித்து விட்டதால் அரசியல் களத்தில் நிலவி வந்த பெரும் குழப்பத்திற்கு பெரும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 நேற்று தேமுதிக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் வெளியிட்ட அறிக்கையில், தேமுதிக முதல் முறையாக மக்களவைத் தேர்தலைச் சந்திக்கிறது. தமிழகத்தில் பல முக்கிய பிரச்னைகள் மத்திய அரசின் மூலமே தீர்க்க வேண்டியுள்ளது. குறிப்பாக, காவிரி நதிநீர் பங்கீடு, பாலாற்று அணை, முல்லைப் பெரியாறு நீர் தேக்கம், ராமேஸ்வரம் மீனவர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும், அண்டை மாநிலங்களிலும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்னை போன்றவை மத்திய அரசின் மூலமே தீர்க்கப்பட வேண்டும். இதுவரையில் இந்தப் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. தமிழகத்துக்கென உள்ள தனிப் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையிலும், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்சம், ஊழல் போன்றவற்றைப் போக்கும் வகையிலும் மக்களவைத் தேர்தல் வெற்றியின் மூலம் தேமுதிக முக்கிய கடமையாற்ற வேண்டியுள்ளது என்று அவர் கூறியிருந்தார்.

மத்திய அரசின் மூலமாக மட்டுமே என்ற வார்த்தையை தேமுதிக அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்ததால் கூட்டணிக்கு விஜயகாந்த் தயாராகி விட்டதாக கருதப்பட்டது.ஆனால் மக்களுடன்தான் கூட்டணி என்று விஜயகாந்த் இன்று கூறியுள்ளார். இருப்பினும் நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு வாக்களியுங்கள் என்று அவர் கூறியுள்ளது சூசகமாக எதையோ உணர்த்துவது போல உள்ளதாக கருதப்படுகிறது.இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் மறைமுகமாக விஜயகாந்த் ஆதரவு தெரிவிக்கலாம் என்று கருதப்படுகிறது.

Advertisements