டெல்லி சென்றுள்ள தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞரணிச் செயலாளரும் விஜய்காந்தின் மச்சானுமான சுதீஷ் ஆகியோர் அங்கு தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமத் படேல் ஆகிய மூத்த காங்கிரஸ் தலைவர்களை இன்று சந்தித்துப் பேசுவர் என்று தெரிகிறது.திமுக, அதிமுகவை எதி்ர்க்கும் விஜய்காந்துக்கு விழும் வாக்குகளில் பெரும்பாலானவை தனது வாக்குகள் என்று கருதும் காங்கிரஸ், தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட தீவிரமாக உள்ளது.

இது தொடர்பாக விஜய்காந்த் தரப்புடன் மறைமுகமாக பேச்சி நடத்தி வருகிறது.இந் நிலையில் தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் தங்களது கட்சிக்கு முரசு சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையச் செயலாளரை சந்திக்க பண்ருட்டி ராமச்ச்திரனும் சுதீசும் டெல்லி வந்துள்ளனர்.

செயலாளரை சந்தித்து அவர் கோரிக்கையும் வைத்தனர். ஆனால் சின்னம் குறித்து இப்போதே முடிவு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. வரும் 27ம் தேதி இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதால் அங்கு சென்று முறையிடுமாறு ஆணையம் தெரிவித்துவிட்டது.இதைத் தொடர்ந்தும் டெல்லியிலேயே தங்கியுள்ள ராமச்சந்திரன், சுதீசுடன் காங்கிரஸ் தரப்பு சில நபர்கள் மூலம் பேச்சு நடத்தியது. அப்போது தங்களது கட்சிக்கு கோவை, கள்ளக்குறிச்சி, வேலூர், உள்ளிட்ட 8 தொகுதிகளை ஒதுக்கும்படி தேமுதிக தரப்பு கோரியதாகத் தெரிகிறது.

ஆனால், தேமுதிக தரப்பு கோரிய பல தொகுதிகளும் காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகள் என்பதால் காங்கிரஸ் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்தத் தொகுதிகளை விட்டுத் தர இயலாதே என்று காங்கிரஸ் கூறியதையடுத்து அப்படியென்றால் கூட்டணியும் சாத்தியமாகாதே என்று தேமுதிக தரப்பு கூறியதாகத் தெரிகிறது.இதையடுத்து தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை விட்டுவிட்டு மற்ற தொகுதிகளில் மட்டும் போட்டியிட முடியுமா என்று தேமுதிகவிடம் காங்கிரஸ் பேச ஆரம்பித்துள்ளது. தான் நிற்கும் தொகுதிகளி்ல் தேமுதிக நிற்காவிட்டால் தனக்கு போட்டி குறையம் என காங்கிரஸ் கருதுகிறது. இதைப் பற்றி யோசிக்க விஜய்காந்த் தயாராக உள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து இன்று மீண்டும் பண்ருட்டி, சுதீசுடன் காங்கிரஸ் பேச்சு நடத்தலாம் என்று தெரிகிறது. கூட்டணியா அல்லது காங்கிரசுக்கு சாதமாக போட்டியா என்பது குறித்து இதில் பேசப்படவுள்ளது.இதில் எதுவும் சரிப்படாவிட்டால் தனித்து நிற்கவும் தேமுதிக ரெடி தான் என்கிறார்கள். அதே நேரத்தில் அதிமுகவும் விஜய்காந்துக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் டெல்லியில் பண்ருட்டி ராமச்சந்திரனை நிருபர்கள் சந்தித்தபோது, கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் பேசி வருவதால், வரும் 21ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார் என்றார்.காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினீர்களா என்று கேட்டதற்கு, அழைப்பு வந்தது உண்மை. ஆனால், இதுவரை பேச்சு ஏதும் நடக்கவில்லை என்று கூறிவிட்டு எஸ்கேப் ஆனார்.

இந் நிலையில் சில தொகுதிகளை விட்டுக் கொடுத்தாவது விஜய்காந்தை கூட்டணிக்குள் எப்படியும் இழுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக சுதீசும் பண்ருட்டியும் நடத்தும் பேச்சுக்கள் முன்னேற்றமடைந்தால் விஜய்காந்தே டெல்லிக்கு விரைந்து சோனியை சந்தித்து கூட்டணியை முடிவு செய்வார் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.இல்லாவிட்டால் குலாம்நபி ஆசாத் சென்னை வந்து காங்கிரஸ்-தேமுதிக தொகுதி பங்கீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்கிறார்கள்.

Advertisements