எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவின் கோட்டை போல திகழ்ந்த தென் மாவட்டங்கள் பக்கம் ஜெயலலிதா தனது கவனத்தை தீவிரமாக திருப்புகிறார். இந்த முறை தென் மாவட்டங்களில் அதிக அளவில் போட்டியிட்டு அவற்றை அதிமுகவின் கோட்டை என நிரூபிக்க அவர் உறுதியுடன் இருக்கிறார்.எம்.ஜி.ஆருக்கு ஆரம்ப காலத்திலிருந்தே கை கொடுத்த தெய்வங்களாக இருந்தவை தென் மாவட்டங்கள்தான். அவர் நடிகராக இருந்தபோதும் சரி, பின்னர் அதிமுகவைத் தொடங்கிய பின்னரும் சரி, தென் மாவட்டங்கள் அதிமுகவின் எஃகுக் கோட்டையாக திகழந்தன.திண்டுக்கல் தொகுதியில் நடந்த இடைத் தேர்தல்தான் அதிமுகவின் முதல் வெற்றிக்குப் பிள்ளையார் சுழி போட்டதாகும். அங்கு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மாயத் தேவர்.

எனவே தென் மாவட்டங்கள் மீது எம்.ஜி.ஆரும் தனிப் பாசத்துடன் இருந்தார். அதேசமயம், வட மாவட்டங்கள், குறிப்பாக சென்னை உள்ளிட்டவை திமுகவுக்கு கோட்டை போல இருந்தன.ஆனால் இந்த நிலை கடந்த சில வருடங்களாக மாறிப் போய் விட்டது. கடந்த சட்டசபைத் தேர்தலில் தென் மாவட்டங்கள்தான் அதிமுகவை கடுமையாக கவிழ்த்து விட்டன. மாறாக சென்னையின் பல தொகுதிகளை அதிமுக கைப்பற்றி, திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.இந்த நிலையில் மீண்டும் தென் மாவட்டங்கள் பக்கம் தனது தீவிர கவனத்தை ஜெயலலிதா செலுத்தியிருப்பதாக தெரிகிறது.

இதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன ..

இலங்கைப் பிரச்சினை. இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரை தமிழகத்தின் வட பகுதிகளை விட தென் மாவட்டங்களில்தான் ஈழத் தமிழர்கள் மீதான அனுதாபம் அதிகம் உள்ளது. இப்பகுதிகளில் பெருமளவில் போராட்டங்கள் நடந்துள்ளதை இது காட்டுகிறது.

மேலும், காங்கிரஸ் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் கைகழுவும் வகையில் நடந்து கொண்டது தென் மாவட்டங்களில்தான் அதிக அளவிலான கண்டனத்தை ஈர்த்துள்ளது.இலங்கைக்கு அருகில் உள்ள பகுதிகள் என்ற அடிப்படையிலும், ஆரம்பத்திலிருந்தே ஈழப் பிரச்சினையில் தென் தமிழக மக்கள் அதீத பாசத்துடன் இருந்து வருவதாலும், காங்கிரஸ் மீது இந்தப் பகுதிகளில் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும், கோபமும் காணப்படுகிறது.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஜெயலலிதா நினைப்பதாக தெரிகிறது. எனவே இந்தப் பகுதிகளில் அவர் பிரசாரம் செய்யும்போது இலங்கைப் பிரச்சினையை பெரிதாக கிளப்புவார் எனத் தெரிகிறது.அடுத்து, திமுக கூட்டணியின் வடிவம். திமுக கூட்டணியில் பாமக சேருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து விட்டது. ஒரு வேளை பாமக திமுக அணியில் இணைந்தால், வட மாவட்டங்களில் திமுக கூட்டணி பலமாகி விடும்.

பாமகவுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தென் பகுதிகளில் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை. அங்கு புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி தலித் வாக்குகளைப் பிரிக்கக் கூடிய நிலையில் உள்ளார். அவர் தற்போது அதிமுக அணியில் இடம் பெற தீவிரமாக உள்ளார். ஜெயலலிதா நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் அவர் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே பாமக, விடுதலைச் சிறுத்தைகள் திமுக அணியில் இடம் பெற்றிருப்பதால், வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்களி்ல் அதிக கவனம் செலுத்தினால் லாபம் அதிகம் என்பது ஜெயலலிதாவின் கணக்கு.

மேலும் தென் மாவட்டங்களில் உள்ள எம்.ஜி.ஆர். வாக்கு வங்கி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. பலர் விஜயகாந்த் பக்கம் திரும்பியுள்ளனர். இருப்பினும் முற்றிலும் அது அதிமுகவுக்குப் பாதமாக மாறி விடவில்லை. ஒரு வேளை விஜயகாந்த் அதிமுக பக்கம் வந்தால் நிச்சயம் தென் மாவட்டங்கள் மீண்டும் அதிமுக கோட்டையாகும் என்றும் நினைக்கிறார் ஜெயலலிதா.தென் மாவட்டங்களில்தான் அதிமுகவுக்கு அதிக சீட்கள் கிடைக்கும் என்று மத்திய அரசு மற்றும் மாநில அரசின் உளவுப் பிரிவு தகவல்கள் கூறுகிறதாம்.எனவே கடந்த முறையை விட இந்த முறை கூடுதலான இடங்களில் தென் மாவட்டங்களி்ல அதிமுக போட்டியிடலாம்.

கூட்டணிக் கட்சிகளுக்கு தமிழகத்தின் வடக்கு, மேற்கு அல்லது மத்தியப் பகுதிகளி்ல் அதிக சீட்களை ஒதுக்கி விட்டு தென் மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளி்ல அதிமுக போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.மதுரை உள்ளிட்ட சில கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளையும் கூட அதிமுகவே எடுத்துக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.அதிமுக இப்படிக் கணக்குப் போடும் என்று எதிர்பார்த்துத்தான் மு.க.அழகிரியை தென் மண்டல அமைப்புச் செயலாளராக ஏற்கனவே நியமித்துள்ளார் கருணாநிதி. மேலும், அவர் மதுரையில் போட்டியிடக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அழகிரி தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் அவரது ஆதரவாளர்கள், மதுரையில் மட்டுமல்லாது தென் மாவட்டங்கள் முழுவதிலும் திமுக அணியை வெற்றி பெற வைக்க உயிரைக் கொடுத்து உழைப்பார்கள் என்பது உறுதி.எனவே திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இந்தத் தொகுதிகளைக் கைப்பற்றுவதில் கிட்டத்தட்ட போரே நடைபெறும் சூழ்நிலை காணப்படுகிறது.

Advertisements